June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூர் பஞ்சாயத்து ஊழியர் கொலையில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

1 min read

Audhaiyanur panchayat employee murder 3 people sentenced to life imprisonment

20.12.2023-
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனரை அடித்து கொலை செய்த மூன்று பேர்களுக்கு தென்காசி விரைவு நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையனூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் தர்மர் இவர் ஆவுடையானூர் ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 2019 ம் ஆண்டு ஆவுடையானூர் அருகே உள்ள வைத்தியலிங்கபுரத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு விழாவின் போது அதே பகுதியைச் சேர்ந்த சுலைமான் என்பவர் குடிபோதையில் பெண்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தர்மர் இந்த பிரச்சினையில் தலையிட்டு சுலைமானை கண்டித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக தர்மர் மற்றும் சிலநபர்களுக்கும் இடையில் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 01.03.2019 அன்று இரவு ஆவுடையானூர் ஊராட்சிக்கு சொந்தமான பம்பு ரூமில் தர்மர் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு 1 மணி அளவில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் தர்மரை இரும்பு கம்பியால் அடித்தும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட தர்மரின் மனைவி ஜெயலட்சுமி பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பாவூர்சத்திரம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆவுடையானூர் இந்திரா நகர் பகுதியைச் சார்ந்த சுப்பிரமணி என்ற சின்னமணி என்பவரின் மகன் சுலைமான் (வயது 27), அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற பெரிய ராஜா என்பவரின் மகன் கலையரசன் (வயது 24), அதே பகுதியைச் சார்ந்த பொன்னுச்சாமி என்பவரின் மகன் ராசா என்ற பெரிய ராஜா (வயது 59) ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மூன்று பேர்களையும் நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி அனுராதா பஞ்சாயத்து ஊழியர் தர்மரை அடித்து கொலை செய்த சுலைமான், கலையரசன், பெரிய ராஜா ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட விரைவு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் சு.வேலுச்சாமி ஆஜரானார்.

இவ் வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுக் கொடுத்த காவல்துறை யினரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பாராட்டினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.