தென்காசி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி
1 min read
A 4-year-old boy died of dengue fever near Tenkasi
24.12.2023
தென்காசி அருகே நெடுவயல் சிவகாமிபுரம் பகுதியைச் சார்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதில் ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெறுகின்றனர். தற்போது நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு 85 குழந்தைகளும், 105 பெரியவர்களும் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இவர்களில் 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது.
மேலும் காய்ச்சலுக்கு புறநோயாளிகளாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் தென்காசி அருகே உள்ள நெடுவயல் சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, இவருடைய மகன் அஜய்குமார் (வயது 4). இந்த சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு
பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அஜய்குமார் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.