April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

ரூ.6,000 கிடைக்காததால் அதிருப்தி: நீதிமன்றம் செல்ல அ.தி.மு.க., முடிவு

1 min read

Dissatisfied with not getting Rs 6,000: ADMK to go to court, decision

2.1.2023
துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், சில தாலுகாக்களில், நிவாரணத் தொகையாக, 1,000 ரூபாய் வழங்கப்படுவது, அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, நீதிமன்றம் செல்ல, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.

துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள தாலுகாக்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் கார்டு அடிப்படையில், 6,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். மற்ற தாலுகாக்களிலும், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களிலும், ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி துாத்துக்குடி மாவட்டத்தில், துாத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்துார், ஏரல், சாத்தான்குளம் தாலுகாக்களில், 3 லட்சத்து 23,108 ரேஷன் அட்டைகளுக்கு, தலா 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஒட்டப்பிடாரம், கயத்தாறு தாலுகாக்களில், 2 லட்சத்து 44,717 ரேஷன் அட்டைகளுக்கு தலா 1,000 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம் தாலுகாக்களில் 6,000 ரூபாய்; திசையன்விளை தாலுகாவில், திசையன்விளை, அப்புவிளை, உறுமன்குளம், கரைசுத்துபுதுார், கரைசுத்து உவரி, குட்டம் ஆகிய வருவாய் கிராமங்களில், 3 லட்சத்து 40,652 கார்டுதாரர்களுக்கு தலா 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

மானுார், நாங்குநேரி தாலுகா, ராதாபுரம், திசையன்விளை தாலுகாக்களில் பிற கிராமங்களில் உள்ள, ஒரு லட்சத்து 63,705 கார்டுதாரர்குளுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது தவிர தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்க முழுதும் தலா 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக 541.37 கோடி ரூபாய், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்தபடி, 6,000 ரூபாய் வழங்கப்படும் கிராமங்களில், எந்த பிரச்னையும் எழவில்லை. ஆனால், 1,000 ரூபாய் வழங்கப்படும் கிராமங்களில், சில கிராம மக்கள் வெள்ளத்தால் தாங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி, தங்களுக்கும் 6,000 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. சில கிராமங்களில் 6,000 ரூபாய் வழங்கக் கோரி, போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், வழக்கறிஞருமான இன்பதுரை கூறுகையில், ”துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 ரூபாய் என்பது மிகவும் குறைவு. அதையும் முறையாக வழங்கவில்லை. சில இடங்களில் 6,000 ரூபாய், சில இடங்களில் 1,000 ரூபாய் என்பது ஏற்புடையதல்ல. நிறைய இடங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முழுமையாக பணம் வழங்கவில்லை. அதனால், இந்த விவகாரத்தை நீதிமன்றம் எடுத்துச் செல்லவிருக்கிறேன். அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க, அ.தி.மு.க., சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.