May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

பிச்சைக்காரர்கள் இல்லாத 30 நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்

1 min read

Central government plan to create 30 beggar-free cities

29.1.2024
நாடு முழுவதும் ஆன்மிக நகரங்கள், வரலாற்று சிறப்பு மிக்க நகரங்கள் மற்றும் சுற்றுலா சிறப்பு வாய்ந்த பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இந்த பகுதிகளில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளன.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அதிகரித்து வரும் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை காரணமாக பல்வேறு வகைகளில் பிரச்சினைகள் ஏற்படுவதாலும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் முக்கிய முடிவுகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு முதல் கட்டமாக 30 நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லாத பகுதியாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து அதற்கான பட்டியலை தயார் செய்து வருகிறது.

இந்த நகரங்களில் இன்னும் 2 ஆண்டுகளில் பிச்சைக்காரர்களுக்கு தனியாக மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஆன்மிக நகரங்களில் சம்பந்தப்பட்ட மத அறக்கட்டளைகள் மற்றும் ஆலய நிர்வாகம் மூலமும் மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது வருகிறது.
இதற்காக நாட்டின் வட பகுதியில் அயோத்தியில் இருந்து கிழக்கே கவுகாத்தி வரையிலும், மேற்கு பகுதியில் திரிம்பகேஸ்வர் முதல் தெற்கே திருவனந்தபுரம் வரையிலும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடும் முதியவர்கள், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக முதல் கட்டமாக 30 முக்கிய நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் முக்கிய நோக்கமே பிச்சைக்காரர்கள் இல்லாத பகுதிகளாக மாற்றுவதாகும். இதற்காக மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு இது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு (ஸ்மைல்) என்ற துணை திட்டத்தின் கீழ் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிச்சை இல்லாத இந்தியா என்ற இலக்கை நிறைவேற்ற இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என்றும் மத்திய அரசு கணித்துள்ளது.

இதற்காக மத்திய அமைச்சகம் ஒரு தேசிய போர்டல் மற்றும் மொபைல் செயலியை அடுத்த மாதம் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த செயலி மூலம் பிச்சை எடுப்பதாக அடையாளம் காணப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகள் மூலம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மறு வாழ்வு வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வாய்ப்பாக அமையும் என்றும் கருதப்படுகிறது.
முதல் கட்டமாக இந்த பட்டியலில் ஆன்மிக நகரங்களான அயோத்தி காங்கிரா, ஓம்காரேஸ்வர், உஜ்ஜயினி, சோம்நாத், பாவகர், திரிம்பகேஸ்வர், போத்கயா, குவா ஹாடியன், மதுரை ஆகிய நகரங்களும், சுற்றுலா பகுதிகளான விஜயவாடா, கேவாடியா, ஸ்ரீநகர், நம்சாய், குஷி நகர் போன்ற பகுதிகளும், வரலாற்று சிறப்புமிக்க நகரங்களான சாஞ்சி, கஜுராகோ, ஜெய்சல்மேர், திருவனந்தபுரம், அமிர்த சரஸ், புதுச்சேரி, உதய்ப்பூர், வாரங்கல், கட்டாக், இந்தூர், கோழிக்கோடு, மைசூரு, பஞ்ச் குலா, சிம்லா, தேஜ்பூர் ஆகிய பகுதிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள சாஞ்சியில் பிச்சைக்காரர்கள் யாரும் இல்லை என்று அந்த பகுதிகளில் உள்ள மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். எனவே இந்த பட்டியலில் சாஞ்சிக்கு பதிலாக மாற்று நகரத்தை தேர்வு செய்யவும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பிச்சைக்காரர்கள் இல்லாத பகுதிகளை உருவாக்க வாய்ப்புகள் ஏற்படும் என்று மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.