May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

அதிகம் ரீல்ஸ் பார்க்காதீர் – மாணவர்களுக்கு பிரதமர் அட்வைஸ்

1 min read

Don’t Watch Too Much Reels – PM’s Advice to Students

29.1.2024
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதி பொதுத்தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும், பயத்தையும் போக்கி துணிவுடன் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு முதல் தேர்வும், தெளிவும் என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி வருகிறார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதுவது எப்படி? என்பது குறித்து ஆலோசனை பெற்று வருகின்றனர். பிரதமர் மோடியும் மாணவர்களிடம் பயமின்றி தேர்வை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 2 கோடியே 56 லட்சம் மாணவர்கள் மற்றும் 5.60 லட்சம் ஆசிரியர்கள் 1.95 லட்சம் பெற்றோர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த கலந்துரையாடலில் பிரதமர் மோடி கலந்து கெரண்டார், அவரை மாணவ-மாணவிகள் பாடல்கள் பாடி வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி அங்கு மாணவர்கள் அமைத்து இருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

கண்காட்சியில் இடம்பெற்று இருந்த கண்டுபிடிப்புகளின் செயல் விளக்கத்தை மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து பாரத் மண்டபத்தில் திரண்டு இருந்த 3 ஆயிரம் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அவரிடம் மாணவ-மாணவிகள் தேர்வு சம்பந்தமாக பல்வேறு கேள்விகள் கேட்டனர். அவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி சளைக்காமல் பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மாணவர்கள் முன்பு எப்போதையும் விட புதுமையாக மாறி உள்ளனர். நமது மாணவர்கள் நமது எதிர்காலத்தை வடிவமைப்பார்கள். இங்கு இடம்பெற்று இருந்த கண்காட்சியில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்து இருந்தனர். அவர்களுக்கும், அனைத்து பள்ளிகளுக்கும் நான் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த பாரத் மண்டபம் வரலாற்று சிறப்புமிக்கது. உலகின் மிகப்பெரிய தலைவர்கள் எல்லாம் இந்த மண்டபத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்த மண்டபத்தில் தற்போது மாணவர்களாகிய நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சி எனக்கும் ஒரு தேர்வு மாதிரி தான். மாணவர்கள் எந்த பதற்றத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாக வேண்டாம். தேர்வு எழுதும் மையத்திற்கு முன்னதாகவே சென்று விடுங்கள். தேர்வு தொடங்குவதற்கு முன்பு பதற்றப்படாமல் நிதானமாக செல்லுங்கள். இதற்காக கொஞ்சநேரம் ஒதுக்கி கொள்ளுங்கள்.

தேர்வை பயமில்லாமல் எதிர்கொள்ள எழுத்து பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள். இந்த பயிற்சி உங்களிடம் நம்பிக்கையை கொடுக்கும். திறமையை அதிகரிக்கும்.

நண்பர்களை என்றைக்கும் எதிரிகளாக பார்க்காதீர்கள். வாழ்க்கையில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். மாணவர்களுக்கு மற்றவர்களுடன் போட்டியிடாமல் தங்களிடம் போட்டியிட வேண்டும். நெருக்கடியை கையாளும் கலையை மாணவர்கள் அவசரமின்றி படிப்படியாக கற்றுக்கொள்ள வேண்டும். நெருக்கடிக்கு மத்தியில் வெற்றி பெற வேண்டும். அதற்கு மனதிடம் அவசியம். அதற்கேற்றாற் போல உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் நம் திறமையை பாதிக்கும். முடிவு எடுப்பதில் உறுதியாக இருங்கள். உங்கள் உடல்நலனுக்கு முக்கியத்தும் கொடுங்கள்.

செல்போனில் ரீல்ஸ் போன்ற வீடியோக்களை அதிகம் பார்க்காதீர்கள். இரவில் நன்றாக தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

சிறிய இலக்குகளை நிர்ணயித்து படிப்படியாக உங்கள் செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த வழியை நீங்கள் கடைபிடித்தால் தேர்வுக்கு முழுமையாக தயாராகி விடுவீர்கள்.

மாணவர்களை போல பெற்றோர்களும் பரீட்சை சமயத்தில் மனஅழுத்தத்தை சந்தித்து வருகிறார்கள்.தயவு செய்து உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ரிப்போர்ட் கார்டுகளை தங்கள் சொந்த விசிட்டிங் கார்டு போல கருதுகிறார்கள். இது நல்லது கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.