May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

“என் மகள் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை”-சர்ச்சைக்கு ரஜினிகாந்த் விளக்கம்

1 min read

“My daughter didn’t mean it wrong”-Rajinikanth explains the controversy

29.1.2024
‘லால் சலாம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள புதிய படம் ‘லால் சலாம்’. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ்.ரவிக்குமார், ஜீவிதா உள்ளிட்ட பலா் நடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.
கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. ‘லால் சலாம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், நெல்சன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ‘நான் எனது தந்தையை பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி. எனக்கு இந்த வார்த்தையை கூறும்போது மிகவும் கோபமாக இருந்தது. இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டும், எனது தந்தை சங்கி இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் சங்கியாக இருந்தால் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து இருக்க மாட்டார்’ என்று தெரிவித்து இருந்தார்.
அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ‘சங்கி என்பது கெட்ட வார்த்தையா..?’ என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த சர்ச்சை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:- ‘சங்கி’ என்பது ஒரு கெட்டவார்த்தை என்ற அர்த்தத்தில் ஐஸ்வர்யா எங்குமே பேசவில்லை. அப்பா ஒரு ஆன்மிகவாதி, எல்லா மதங்களையும் விரும்புபவர், அவரை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பதே அவருடைய பார்வை. ‘லால் சலாம்’ படம் நன்றாக வந்திருக்கிறது. மதநல்லிணக்கம் குறித்து பேசுகிறது. இப்போது நான் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்று கொண்டிருக்கிறேன். அந்தப் படமும் நன்றாக வந்துள்ளது” இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

‘லால் சலாம்’ படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.