திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.5 ஆயிரம் கோடி பட்ஜெட்
1 min read5000 crore budget for Tirupati Esummalayan temple
31.1.2024
திருப்பதி மலையில் அறங்காவலர் குழுத்தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து கருணாகர ரெட்டி கூறியதாவது:-
தேவஸ்தானத்தின் 2024-25-ம் நிதியாண்டுக்கான வரவு செலவு பட்ஜெட் திட்டத்தை அறங்காவலர் குழு கூட்டத்தில் கொண்டு வந்தனர். ரூ.5 ஆயிரத்து 141 கோடியே 74 லட்சம் மதிப்பிலான வரவு செலவு திட்டத்துக்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இதுவரை ஏழுமலையானுக்கு ரூ.ஆயிரத்து 611 கோடி காணிக்கையை பக்தர்கள் செலுத்தி உள்ளனர் அடுத்த நிதியாண்டிலும் அதே அளவுக்கு காணிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளில் தேவஸ்தானம் செய்துள்ள நிரந்தர டெபாசிட்டுகள் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.ஆயிரத்து 68 கோடியே 51 லட்சம் வட்டி வருவாய் கிடைத்தது. அடுத்த நிதியாண்டில் வட்டி வருவாய் ரூ.ஆயிரத்து 167 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் பிரசாத விற்பனை மூலம் ரூ. 550 கோடி கிடைத்த நிலையில், அடுத்த நிதியாண்டில் ரூ.600 கோடி ரூபாய் கிடைக்கும்.
தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ.328 கோடி கிடைத்த நிலையில், அடுத்த ஆண்டும். அதே நிலை தொடரும், கட்டண சேவை டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.140 கோடி கிடைத்த நிலையில், அடுத்த நிதியாண்டில் ரூ.150 கோடி வரை கிடைக்கும்.
ஊழியர்களின் சம்பளத்துக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.ஆயிரத்து 664 கோடி செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த நிதியாண்டில் சம்பளத்துக்கு ஆயிரத்து ரூ. 733 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.
பிப்ரவரி மாதம் 3, 4, 5-ந் தேதிகளில் திருப்பதி மலையில் ஆன்மிக மாநாடு நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்க 57 பீடாதிபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.