தலைமறைவானதாக கூறப்பட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டிற்கு வந்தார்
1 min readReportedly absconding Jharkhand Chief Minister Hemant Soran visits residence
31.1.2024
ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் நிலம் மோசடி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் பணப்பரி மாற்றத்தைச் செய்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக கடந்த 20-ம் தேதி அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு அதை வீடியோவில் பதிவு செய்தனர்.
ஹேமந்த் சோரன் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக அவருக்கு அடுத்தடுத்து 8 தடவை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவற்றுக்கு சோரன் பதில் அளிக்கவில்லை.
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் ஜனவரி 29-ம் தேதி அல்லது 31-ம் தேதி வீட்டுக்கு விசாரணைக்கு வருவதாக அமலாக்கத் துறையினர் கடிதம் அனுப்பினர். இதற்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விசாரணை என்ற பெயரில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி இருந்தார்.
இதற்கிடையே, முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த கடந்த சனிக்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றார். தெற்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அவர் தங்கியிருந்தார். தகவலறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் சில நிமிடங்களுக்கு முன் ஹேமந்த் சோரன் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதையடுத்து அவரது உதவியாளர்கள் தொலைபேசியிலும் அமலாக்கத் துறையினர் தொடர்பு கொண்டனர். ஆனால் அனைத்து செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன.
என்றாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிலேயே காத்திருந்தனர். சுமார் 18 மணி நேரம் அவர்கள் காத்திருந்த நிலையில் ஹேமந்த் சோரன் திரும்பி வரவில்லை. அவர் அன்று மாலை டெல்லியில் இருந்து ராஞ்சி திரும்ப விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். விமான நிலையத்துக்கும் அவர் வரவில்லை. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டெல்லி மாநில எல்லைகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டது.
என்றாலும் ஹேமந்த் சோரன் எங்கு சென்றார் என்பது தெரியாமல் இருந்தது. அவரை தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மாயமாகி இருப்பதாக கூறப்பட்டது.
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் ராஞ்சி இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், ஹேமந்த் சோரன் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் மாநில தலைநகரை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
ஜார்கண்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.