மாறுவேடத்தில் மக்களை சந்திக்கும் நடிகர் விஜய்
1 min readActor Vijay meets people in disguise
12.2.2024
தமிழக வெற்றி கழகம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து, மக்களிடம் நடிகர் விஜய் கருத்து கேட்டு வருகிறார்.
தன் கட்சி ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து திரையுலகைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருடன், தொலைபேசியில்அவ்வப்போது விஜய் பேசி வருகிறார். இது மட்டுமின்றி, பொது மக்களின் கருத்தை நேரடியாக அறிவதற்கான முயற்சியிலும் அவர் இறங்கிஉள்ளார்.
தற்போது, கோட் படப்பிடிப்புக்காக, புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் விஜய் முகாமிட்டுள்ளார். சனி, ஞாயிறு நாட்களில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தன் பனையூர்வீட்டிற்கு வந்து செல்கிறார்.
புதுச்சேரியில் மக்கள் கூடும் பல்வேறு இடங்களுக்கு மாறுவேடம் அணிந்து சென்று, தமிழக வெற்றி கழகம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து, விஜய் கருத்து கேட்டு வருகிறார்.
கட்சியை பலப்படுத்துவதற்கு என்னென்ன பணிகளை செய்ய வேண்டும்; தன்னிடம்மக்கள் எதை எதிர்பார்க்கின்றனர் என்பதை மறைமுகமாக கேட்டறிந்து வருகிறார்.
இதை, தன் சட்டை பாக்கெட்டில் வைத்துள்ள மொபைல் போனில் ரகசியமாக ஆடியோ பதிவும் செய்து வருகிறார். இது போன்ற ரகசிய நடவடிக்கையால், மக்களின் மன நிலையை புரிந்து, அதன்படி நடந்து கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி அறிவிப்புக்கு முன்பாகவும் நடிகர் விஜய், தமிழகத்தின் பல இடங்களிலும் மாறுவேடத்தில் பொதுமக்கள் எண்ணம் அறியும் பணியை செய்ததாக அக்கட்சி வட்டாரங்கள் கூறின.