குற்றாலம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் தாலிச் செயின் பறித்த 2 பேர் கைது
1 min read2 people were arrested for breaking into a house near Courtalam and snatching the talich
26.2.2024
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே மேலகரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தங்கச் செயினை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலகரம் ஸ்டேட்பேங்க் காலனி பகுதியில் வசித்து வரும் புவனேஸ்வரி என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது நேற்று காலை 11.30 மணிக்கு வந்த 22 வயது மதிக்கத்தக்க நபர் தான் மேலகரம் பஞ்சாயத்தில் இருந்து வந்திருப்பதாகவும்
தங்களின் வீட்டில் குடி தண்ணீர் இணைப்பில் மோட்டார் வைத்திருப்பதால் அதை அகற்ற வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். தனது கணவர் இல்லை அவர் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று புவனேஸ்வரி கூறியதால் திரும்பி சென்று அந்த நபர் மீண்டும் மதியம் 03.00 மணியளவில் அவருடன் 18 வயது மதிக்கத்தக்க நபரையும் அழைத்து வந்து மோட்டாரை அகற்ற வந்துள்ளோம். பிளேடு எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளார்.
புவனேஸ்வரிவீட்டிற்குள் சென்ற போது அவரின் பின்னே சென்ற இருவரும் புவனேஸ்வரி யிடமிருந்து 32 கிராம் மதிப்புள்ள தங்க தாலிச் செயினை பறித்து கொண்டு அவரை ஒரு ரூமில் தள்ளி பூட்டிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் புவனேஸ்வரி செல்போன் மூலமாக எதிர் வீட்டு பெண்ணை தொடர்பு கொண்டு கதவை திறந்து வெளியே வந்து குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் மேற்படி இருவரையும் விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்டதின் பேரில் குற்றாலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மேலகரம் அருகே உள்ள சிந்தாமணி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் மாரிச்செல்வம் (வயது23) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனடியாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்த போலீசார் மாரிச்செல்வத்தை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் ம் 16 வயது சிறுவன் இளஞ்சிரார் நீதிகுழுமம் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட 32 கிராம் தங்க தாலிச் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.