May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரத்தில் வணிக வரித்துறை அதிகாரிகள்- வியாபாரிகள் மோதல்

1 min read

Clash between commercial tax officials and traders in Pavoorchatram

27.2.2024
தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரத்தில் ரூ.900 மதிப்பிலான
காலி தண்ணீர் கேன்களை கொண்டு சென்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த வணிக வரிதுறையினரை- கண்டித்து வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாவூர்சத்திரத்தில் ரூ.900 மதிப்பிலான காலி தண்ணீர் கேன்களை கொண்டு சென்றவருக்கு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த வணிக வரித்துறையினரை கண்டித்து வியாபாரிகள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டி பொட்டலூரைச் சேர்ந்தவர் வைத்திலிங்கராஜ். இவர் பாவூர்சத்திரத்தில் பிளாஸ்டிக் மற்றும் பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் தினந்தோறும் வீட்டில் இருந்து தனது காரில் கடைக்கு வந்து செல்வது வழக்கம்.
நேற்று காலை வழக்கம் போல் கடைக்கு வரும் போது, வீட்டில் இருந்து காலி பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களை ஒரு சாக்கு பையில் கட்டி, தனது காரின் மீது வைத்து வந்துள்ளார். அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த வணிகவரித்துறை அதிகாரிகள் வைத்திலிங்கராஜீன் காரை வழிமறித்து. அவர் கொண்டு சென்ற காலி தண்ணீர் கேன்களுக்கு ரசீதை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு வைத்திலிங்கராஜ் தன்னிடம் ரசீது இல்லை என்றும் அதன் மதிப்பு ரூ.900 மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசீது இல்லாத காரணத்திற்காக வணிகவரித்துறையினர் ரூ.10,000 அபராதம் விதித்து, அதற்கான ரசீதை வைத்திலிங்கராஜிடம் கொடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த வைத்திலிங்க ராஜ் தான் வைத்திருந்த காலி தண்ணீர் கேன்களின் மதிப்பு ரூ.900 முதல் 2000 வரையில் மட்டுமே என கூறி தலையில் சத்தியம் செய்ததுடன், இதற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதா எனக்கூறி கண்ணீர் விட்டு புலம்பியுள்ளார். இதனிடையே இது பற்றி தகவல் அறிந்த பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் அங்கு திரண்டு வந்து வணிகவரித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது மிகவும் குறைந்த மதிப்பிலான பொருளுக்கு இவ்வளவு பெரிய அபராத தொகையா எனவும் நீங்கள் சாப்பிட்ட உணவிற்கும் காருக்கு நிரப்பிய பெட்ரோலுக்கும் ரசீது காட்ட முடியுமா? என சரமாரியாக வியாபாரிகள் வணிகவரித்துறை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் வணிகர்கள் அதிக அளவில் குவிந்ததால் பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கூடுதல் செயலாளர் ஆர்.கே.காளிதாசன் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏதும் ஏற்படாததால் அனைவரும் பாவூர்சத்திரம் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு ஆலங்குளம் டி.எஸ்.பி. பர்ணபாஸ் பேச்சுவார்த்தை நடத்தி,; வணிகம் செய்யும் வியாபாரிகளை துன்புறுத்த வேண்டாம் எனவும் போலீசார் மற்றும் வணிகவரித்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதையடுத்து அனைவரும் சுமுகமாக கிளம்பி சென்றனர்.
ஏற்கனவே பாவூர்சத்திரம் பகுதியில் மற்றொரு பேக்கரி கடையில் பப்ஸ் தயார் செய்து மற்ற கடைகளுக்கு விற்பனைக்கு எடுத்துச்செல்லும் போது, இதே போல் வணிக வரித்துறை அதிகாரிகள் வழிமறித்து பப்ஸ்க்கு ரசீது கேட்டு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனராம். இதே போல் தொடர்ந்து சிறு, குறு தொழில் செய்யும் வணிகர்கள் தங்களின் பொருட்களை ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு எடுத்துச் செல்வதை நோட்டமிட்டு, அவர்களிடம் சோதனை செய்து அபராதம் விதிப்பதை வணிகவரித்துறையினர் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், இதனால் தாங்கள் வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.