அமெரிக்காவில் குர்துவாரா வாசலில் சீக்கியர் படுகொலை
1 min readMassacre of Sikhs at Gurdwara gate in America
1.3.2024
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் மாவட்ட டண்டா சகுவாலா (Tanda Sahuwala) கிராமத்தை சேர்ந்த “கோல்டி” என அழைக்கப்படும் 29 வயதான ராஜ் சிங் சுமார் ஒன்றரை வருட காலமாக அமெரிக்காவில் தங்கியிருந்தார்.
“கீர்த்தன்” எனப்படும் சீக்கிய மதத்தின் பக்தி பாடல்கள் பாடுவதில் திறன் மிக்கவரான ராஜ் சிங், அலபாமா மாவட்டத்தில் உள்ள ஒரு குர்துவாரா எனப்படும் சீக்கிய வழிபாட்டு தலத்திற்கு வெளியே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர், ராஜ் சிங்கை சுட்டனர். இதில் துப்பாக்கி குண்டு அவரது வயிற்று பகுதியில் பாய்ந்ததில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒரு சில இனத்தவர்கள் மீது வெறுப்புணர்வினால் வேறு சில இனத்தவர்கள் தாக்குதலிலோ அல்லது வன்முறை செயலிலோ ஈடுபடும் வெறுப்புணர்வு குற்றம் (hate crime) எனும் வகையிலான குற்றமாக இது இருக்கலாம் என ராஜ் சிங் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இப்பிராந்தியத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மீது நடத்தப்படும் இரண்டாவது கொலை சம்பவம் இது.
மேலும், அமெரிக்காவில், 2024 பிப்ரவரியிலும், 2023 ஜூலையிலும் இந்திய வம்சாவளியினர் மீது வெறுப்புணர்வு கொண்ட தனி நபர்களால் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த ராஜ் சிங்கின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவி செய்ய கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.
தனது தந்தையின் உயிரிழப்பிற்கு பிறகு தனது தாயையும் இரண்டு சகோதரிகளையும் ஒரு சகோதரனையும் காப்பாற்றும் பொறுப்பில் இருந்த ராஜ் சிங் கொல்லப்பட்டது அவரது சொந்த ஊரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.