இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் நிவாரணப் பொருட்கள் வாங்க வந்த 104 பேர் பலி
1 min read104 people who came to buy relief goods in Gaza were killed in the Israeli attack
1.3.2024
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு நாளுக்கு நாள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் காசாவில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. இதனிடையே போரின் விளைவால் காசா மக்கள் தொகையில் கால்வாசி பேர் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாகவும், பல லட்சம் மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பரிதவித்து வருவதாகவும் ஐ.நா. கவலை தெரிவித்தது.
இதனால் குறைவான அளவில் கிடைக்கும் நிவாரண பொருட்களை பெற மக்கள் முண்டியடிப்பதாகவும், ஒரு சில இடங்களில் மக்கள் நிவாரண பொருட்களை கொள்ளையடித்து செல்வதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் காசாவின் மேற்கு பகுதியில் உள்ள நபுல்சி ரவுண்டாபவுட் என்ற இடத்திற்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வருவதாக வந்த தகவலின் பேரில் அவற்றை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
நிவாரண பொருட்களை கொண்டு வரும் லாரிகளை அவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். நிவாரணப் பொருட்கள் வந்த லாரிகளுடன் இஸ்ரேல் ராணுவ வாகனங்களும் வந்தன. லாரி அப்பகுதிக்கு வந்ததும், மக்கள் லாரியை முற்றுகையிட்டு பொருட்களை வாங்க முண்டியடித்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிலர் சிக்கி காயம் அடைந்ததாக தெரிகிறது.
இதனால் இஸ்ரேல் ராணுவம் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது இஸ்ரேல் ராணுவம் திடீரென மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் 104 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம் “நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்கான மக்கள் முண்டியடித்தனர். அப்போது அருகில் இருந்து இஸ்ரேல் ராணுவ வாகனத்தை நோக்கி வந்தனர். அவர்கள் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தும் விடுப்பதாக நம்பப்பட்டது. இதனால் தங்களை காப்பாற்ற துப்பாக்கிச்சூடு நடத்தினர்” எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே காசாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கான உபகரணங்கள் இன்றி தள்ளாடி வரும் நிலையில் தற்போதைய இந்த கொடூர சம்பவத்தால் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், கழுதை வண்டியில் பலியானவர்களின் உடல்கள் கொண்டு செல்லப்படும் பரிதாப நிலையை காண முடிந்தது.
இதற்கிடையே அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் உடனடி போர் நிறுத்தம் தேவை. பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காசாவில் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இது ஒரு படுகொலை என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.