July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றது வெட்கக்கேடானது – எடப்பாடி பழனிசாமி

1 min read

Taking money from gambling company is shameful – Edappadi Palaniswami

17.3.2024
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க இந்தியாவில் நடைமுறையில் உள்ள வழக்கம் தான் தேர்தல் பத்திரங்கள். இதை கொண்டு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க முடியும்.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வடிவில் கடந்த 2018 முதல் 2024 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி கிடைத்துள்ளது, அதனை யார் வழங்கினர் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

இவை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வலைதள விவரங்களின் படி அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை அவர்களுக்கு அதிக நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி லாட்டரி அதிபர் மார்டின் தி.மு.க. கட்சிக்கு ரூ. 509 கோடி வரை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். நாட்டிலேயே அதிக மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியவர் மார்டின். இவர் தான் வாங்கிய தேர்தல் பத்திரங்களில் 37 சதவீத தொகையை தி.மு.க. கட்சிக்கு வழங்கியுள்ளார். இதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது.”
“சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.”

“ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.”

“மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர், திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.