காதலை கைவிட மறுத்த மகளை கொன்ற பெற்றோர்- 3 பேர் கைது
1 min read
Parents who killed daughter who refused to give up love- 3 arrested
17.3.2024
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பட்வாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் காமாட்சி தம்பதியின் மகளான ஸ்பூர்த்தி (வயது 16) பாகலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இந்நிலையில் 15-ம் தேதி பட்டவாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் சிறுமி சடலமாக மிதந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறுமி அந்த வாலிபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாணவியை மீட்டு மீண்டும் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை யாரோ துண்டை போட்டு மூடியுள்ளனர். இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்த சிறுமியின் பெற்றோரே அவரை கொலை செய்தது தெரியவந்தது.
மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மகளை கண்டித்துள்ளனர். ஆனால் மாணவி காதலை கைவிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மகளை தாக்கி, ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து மாணவியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.