இரட்டை இலைக்காக மீண்டும் ஓ.பி.எஸ். தீவிர முயற்சி – தேர்தல் ஆணையத்தில் புதிய மனு
1 min readOPS again for double leaf. Serious effort – new petition in Election Commission
23.4.2024
அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18-ந்தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? இல்லையா? என்பது குறித்து நிலுவையில் உள்ள மூல வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் கூறி உள்ளது.
42 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த எனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்களோ, அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுதாக்கல் செய்துள்ளார்
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. இரண்டு விதமான கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் இணைய தளத்தில் பதிவேற்றி உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 4-வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப் பட்டுள்ளது.
இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த எஸ்.சூரியமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளித்த பதில் மனுவில், “சூரியமூர்த்தி அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினரே இல்லை. சின்னம் தொடர்பாக மனு அளிக்க அவருக்கு உரிமை இல்லை” என பதில் அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் கே.சி.சுரேன், ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக, கட்சியின் அவைத் தலைவர் தேர்தல் ஆவணங்களான ஏ.பி. படிவங்களில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் சூரிய மூர்த்தி மற்றொரு மனுவை நேற்று தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சிவில் நீதிமன்றம் இன்றளவும் என்னை அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே பல்வேறு சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கோ, வேறு நபர்களுக்கோ ஒதுக்க கூடாது என தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.