நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்
1 min readMike is the symbol of Naam Tamilar Party.
27.3.2023
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ”மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ”மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க” என்று பதிலளித்தார்.