அருணாச்சலில் 5 பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
1 min read5 BJP in Arunachal Candidates are selected without competition
28.3.2024
அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க அரசின் முதல்வர் பெமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி எம்.எல்.ஏ. வாக தேர்வாக உள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தில் 60 சட்டசபை தொகுதிகளும், 2 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. இவற்றிற்கு வரும் ஏப்.,19ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு நேற்றுடன் (மார்ச் 27) முடிவடைந்தது. இதில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 2ம் தேதியும், லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதியும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வை சேர்ந்த 5 வேட்பாளர்களுக்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் பிற வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றதால், முதல்வர் பெமா காண்டு (முக்டோ தொகுதி), ஜிக்கே டாகோ (தாலி தொகுதி), நியாடோ டுகோம் (தாலிஹா தொகுதி), ரட்டு தேச்சி (சாகலி தொகுதி), முச்சு மிட்டி (ரோயிங் தொகுதி) ஆகிய பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.
இது தொடர்பாக முதல்வர் பெமா காண்டு கூறுகையில், ”வேட்புமனு தாக்கல் நிறைவில் 5 தொகுதிகளில் ஒரே ஒரு வேட்புமனு மட்டுமே தாக்கல் ஆகியுள்ளது. இதனால் நாங்கள் 5 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளோம். மார்ச் 30ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் என்பதால் அதற்குள் இன்னும் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் வாபஸ் பெறும் பட்சத்தில், போட்டியின்றி தேர்வாகும் எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றார்.