குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் 2 பேரிடம் கூடுதல் விசாரணைக்கு அனுமதி
1 min read
Further investigation allowed against 2 blast terrorists
14.4.2024
‘ராமேஸ்வரம் கபே’ குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு முக்கிய குற்றவாளிகளை, கூடுதல் விசாரணைக்காக என்.ஐ.ஏ.,விடம் 10 நாட்கள் ஒப்படைத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.பெங்களூரு மாரத்தஹள்ளி அடுத்த புரூக்பீல்டு பகுதியில், பிரபல ‘ராமேஸ்வரம் கபே’ உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில், மார்ச் 1ம் தேதி, இரண்டு முறை குண்டு வெடித்தது; 10 பேர் படுகாயமடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவம், நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை, என்.ஐ.ஏ., மற்றும் சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான கச்சா பொருட்கள் வாங்கிக் கொடுத்த, சிக்கமகளூருவை சேர்ந்த முஜாமில் ஷரீப்(30), என்பவர் கடந்த மாதம் 26ம் தேதி, பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.அவரிடம் நடத்திய விசாரணையில், ஷிவமொகாவின் முஸவீர் ஹுசைன் ஷாஜெப், 30, அப்துல் மதீன் தாஹா, 30, ஆகியோர் தான் ராமேஸ்வரம் கபேவில் குண்டு வெடிக்க செய்தனர் என்பது தெரிய வந்தது.அவர்கள், பல்லாரி, தட்சிண கன்னடா வழியாக கேரளாவுக்கும், அங்கிருந்து சென்னைக்கும், பின் மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவிற்கும் சென்றது உறுதியானது.அதன் அடிப்படையில், முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரையும், கோல்கட்டாவின் ஒரு தனியார் ஹோட்டலில் நேற்று முன்தினம் அதிகாலை, உள்ளூர் போலீஸ் உதவியுடன் என்.ஐ.ஏ., போலீசார் கைது செய்தனர்.
அங்குள்ள நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.பின்னர், விமானம் மூலம் இருவரும் நேற்று முன்தினம் பெங்களூரு அழைத்து வரப்பட்டனர்.பெங்களூரு கோரமங்களாவில் உள்ள என்.ஜி.வி., காம்ப்ளேக்சில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் காலை 11:30 மணிக்கு, இரண்டு பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது, “குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும், ஏற்கனவே பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர்கள். மேலும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர்களிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இருவரையும் 10 நாட்கள் என்.ஐ.ஏ., காவலில் ஒப்படைக்க வேண்டும்,” என, என்.ஐ.ஏ., தரப்பு வழக்கறிஞர் பி.பிரசன்னகுமார் கோரினார்.
இதையடுத்து, 10 நாட்கள் என்.ஐ.ஏ., காவலில் ஒப்படைத்து, நீதிபதி சி.பி.சந்தோஷ் உத்தரவிட்டார். பின், இரண்டு பேரையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.இருவரையும் குண்டு தயாரித்த இடம், வெடிக்க செய்த இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க என்.ஐ.ஏ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தில், வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, சதி திட்டத்துக்கு உதவியது யார் உள்ளிட்டவை குறித்தும் விசாரிக்க என்.ஐ.ஏ., திட்டமிட்டுள்ளது.