April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

ராம நவமி நாளில் அயோத்தி பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி

1 min read

Sunlight on the forehead of Ayodhya Bala Rama statue on Rama Navami day

17.4.2024
பகவான் ஸ்ரீ ராமரின் அவதாரத் திருநாளான இன்று ராம நவமி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அயோத்தியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் பால ராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராம நவமி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான சூரிய அபிஷேக மகோத்சவம் இன்று நடைபெற்றது. நண்பகல் 12.01 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. பால ராமரின் நெற்றியில் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு சூரிய ஒளிக்கதிர் விழுந்து திலகமிட்டது. நெற்றித் திலகத்தின் அளவு 58 மி.மீ. அளவுக்கு இருந்தது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்வை அயோத்தியில் உள்ள பக்தர்கள் தெளிவாக காணும் வகையில் நகரம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகளில் ஒளிபரப்பப்பட்டது.

அயோத்தி ராமர் கோவிலின் கருவறைக்குள் சூரிய ஒளி நேரடியாக நுழைய வழி இல்லை. இதனால், கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் அடங்கிய ஒரு விரிவான வடிவமைப்பு மூலம் பால ராமருக்கு ‘சூரிய திலகம்’ நிகழ்வை நிகழ்த்தி உள்ளனர். மூன்றாவது தளத்தில் இருந்து சூரிய ஒளிக்கதிர், கருவறையில் இருக்கும் பால ராமரின் நெற்றியில் சரியாக விழும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் வானியற்பியல் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து, ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த அமைப்பை உருவாக்கி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று பால ராமரின் சிலையின் நெற்றியில் சூரியனின் கதிர்களை துல்லியமாக விழச்செய்யும் வகையில் ஆப்டோமெக்கானிக்கல் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியனின் திசையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களில் சிறிய மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும்.
அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ராம நவமி விழா மற்றும் முதல் சூரிய திலகம் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

ராம நவமியை முன்னிட்டு, பால ராமர் மஞ்சள் நிற ஆடை அலங்காரத்தில் காட்சியளித்தார். ராமருக்கு 56 வகையான பிரசாதங்கள் படைக்கப்பட்டன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.