May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் மூளைக்கு வந்த ஆபத்து/நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram Brain Danger/Comedy Story/ Tabasukumar

21.4.2024
கண்ணாயிரம் தேர்தலையொட்டி ஜவுளிக்கடைக்காரரிடம் சேலை எடுத்த வகையில் நாப்பதாயிரம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தத் தொகையை ஜவுளிக்கடைக்காரர் கேட்டபோது சமாளிக்க முடியாமல் கண்ணாயிரம் மயங்கிவிழுந்தார்.
பின்னர் அவர் மயக்கம் தெளிந்த போது அவருக்கு பழைய நினைவுகள் மறந்துவிட்டது தெரியவந்தது. எனவே,கண்ணாயிரத்தை அவரது மனைவி பூங்கொடியும் மாமனார் அருவாஅமாவாசையும் ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர்.
அப்போது லைலா இருக்கும் ஆஸ்பத்திரிதானே வருகிறேன் என்று கண்ணாயிரம் மகிழ்ச்சியில் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.
ஆஸ்பத்திரி வந்ததும் கண்ணாயிரம் ஆட்டோவில் இருந்து இறங்கினார். அருவாஅமாவாசையைப் பார்த்து.. சரி..நீங்க இறங்குங்க..ஆஸ்பத்திரிலே யாரும் அருவாவாங்க மாட்டாங்க.. தெருவிலே போய் கூவி கூவிப் பாருங்க.. அருவா விக்கலாம்..போங்க என்று விரட்டினார்.
அருவாஅமாவாசை பற்களை கடிக்க, பூங்கொடி..அப்பா..நீங்க..கடை வீதிக்குப் போயிட்டுவாங்க.. நான் டாக்டருக்கிட்ட அவரை கூட்டிட்டுப் போய் காட்டிட்டு வர்ரேன்..என்றார்.
கண்ணாயிரம்..பூங்கொடியிடம்..எங்க அம்மா எங்கே..அவங்க வந்ததும் நீங்க போயிடணும்..சரியா என்க..பூங்கொடியும் சரி..சரி வாங்க வாங்க..என்று டாக்டரிடம் அழைத்துச் சென்றார்.
ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமாக இருந்தது. பூங்கொடி டோக்கன் வாங்கிவிட்டு வந்தார். ஒன்பதாம் நம்பர் என்றிருந்தது. கண்ணாயிரம் பெஞ்சில் அமர பூங்கொடி அருகில் நெருங்கி அமர.. கண்ணாயிரம்..கொஞ்சம் தள்ளியே இருங்க.. பாக்கிறவங்க தப்பா பேசுவாங்க. என்க. பூங்கொடி கோபத்தை அடக்கிக்கொண்டு சரி.. என்று ஒதுங்கி அமர்ந்தார்.
ஒவ்வொருவராக டாக்டரை பார்க்கச் செல்ல.. கண்ணாயிரம் யோசனையில் இருந்தார். சிறிது நேரத்தில்.. ஒன்பதாம் நம்பர் டோக்கன் கண்ணாயிரம்..கண்ணாயிரம். கண்ணாயிரம் என்று ஊழியர் குரல் கொடுக்க..கண்ணாயிரம் எழுந்து நின்றார்.
பூங்கொடி வாங்க டாக்டரைப் பார்ப்போம் என்றபடி கண்ணாயிரத்தை அழைத்துச்செல்ல கண்ணாயிரம் தலையை ஆட்டியபடி நடந்து சென்றார்.
கதவை தள்ளியபடி இருவரும் உள்ளே நுழைந்தனர்.
உள்ளே சுழலும் நாற்காலியில் டாக்டர் அமர்ந்திருந்தார். கண்ணாயிரமும் பூங்கொடியும் டாக்டருக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்திருந்தனர்.
டாக்கர் மெல்ல..ம் சொல்லுங்க..யாருக்கு என்ன செய்யுது என்று கேட்டார்.
கண்ணாயிரம்..உடனே. நீங்க நல்லா இருக்கீங்களா டாக்டர் என்க.. டாக்டர் விழிக்க.. பூங்கொடி ..மெதுவாக.. டாக்டர்.. இவருக்குத்தான் பிரச்சினை டாக்டர்.. பழைய நினைவுகள் மறந்தமாதிரி பேசுறாரு டாக்டர்.. அதான் பயமாக இருக்குசார் என்றார்.
எத்தனை நாளா அப்படியிருக்கு என்று டாக்டர் கேட்க, பூங்கொடி ..இப்பதான் டாக்டர் ..ஒருமணி நேரத்துக்கு முன்னிருந்து அப்படி பேசுறாரு..என்றார்.
உடனே டாக்டர்..எதாவது அதிர்ச்சியான சம்பவம் எதுவும் நடந்துச்சா என்க.. பூங்கொடி ஆமா,டாக்கர்..இவரு ஜவுளிக்கடைக்காரரிடம் நாப்பதாயிரம் கடன் வாங்கியிருந்தார். அவர் அந்த கடனை திருப்பிக் கேட்டார்.. அதில் அதிர்ச்சி அடைஞ்சி இப்படி ஆயிட்டாரு..என்றார்.
டாக்டர்..ம் கடனை திருப்பிக் கேட்டதுக்காக அதிர்ச்சியா.. நம்ம முடியலையே.. வேற எதாவது தலையிலே எப்போவாவது அடிபட்டுச்சா என்று கேட்டார்.
பூங்கொடி, ஆமா டாக்டர்.. நாங்க குற்றாலம் டூர் போயிட்டு பஸ்சில வந்தோம். அப்போது பஸ் கவிழ்ந்திருச்சு.. இவர் சேலையால் மூடி படுத்திருந்தார். அப்போ தலைகீழா உருண்டதில கால், கையிலே காயம்.என்றார்.
டாக்டர்.. எதுவும் தலையிலே காயம் ஏற்பட்டதா..என்று கேட்க, பூங்கொடி..ஆமா.. டாக்டர்.. பாளையங் கோட்டை ஆஸ்பத்திரியிலே டாக்டர் சோதித்துப் பார்த்துவிட்டு..தலையிலே சேலையால மூடியிருந்ததாலே தலையிலே சின்ன அடிதான்..பெரிய பாதிப்பு இல்லை என்று சொன்னதாகத் தெரிவித்தார்.
டாக்டர்..ஓ..அப்படியா..,எதுக்கும் தலையிலே ஸ்கேன் எடுத்துப் பாக்கணும்.. மூளையிலே எதுவும் பாதிப்பு ஏற்பட்டிருக்கா என்று பார்க்கணும் என்றார்.
பூங்கொடி உடனே.. இவருக்கு மூளையே கிடையாது டாக்டர் என்க.. டாக்டர் ..அது எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்டார். அதற்கு, பூங்கொடி, எங்க அப்பா அடிக்கடி சொல்லியிருக்கார்.. கண்ணாயிரத்துக்கு மூளையே இல்லை என்று என்னிடம் சொல்வார் என்றார்.
டாக்டர் கோபமாகி..உங்க அப்பா சொல்லுறதெல்லாம் நம்பமுடியாது. ஸ்கேன் ரிப்போர்ட் சொல்லுறதைத்தான் நம்பமுடியும்..சரியா என்றார்.
பூங்கொடி, ம்..அவருக்கு மூளையில்லை என்று நான் சொல்லுறதை நம்ப மாட்டீங்க, ஒரு ஸ்கேன் சொல்லுறதைத்தான் நம்புவீங்களா என்க, டாக்டர்.. ஆமா..ஸ்கேன் சொல்லுறதைத்தான் நம்புவோம்.. அதுதான் சரியா இருக்கும் என்றார்.
உடனே கண்ணாயிரம்..ஆமா என்ன மூளைன்னு பேசுறீங்க..என்று கேட்க.. டாக்டர் ஒண்ணும் இல்லை என்றார்.
கண்ணாயிரம்..ம் மூளை ஒண்ணும் இல்லையா ..மட்டன் கடையிலே கேட்க வேண்டியதை ஆஸ்பத்திரியிலே கேட்டா எப்படி கிடைக்கும் என்றபடி சிரித்தார்.
டாக்டர்..ம் மூளை இருக்கான்னு..ஸ்கேன் எடுத்துப் பாக்கிறதுதான் சரி என்றார்.
பூங்கொடி..ம்..நான் சொன்னா நம்பமாட்டிங்க..சரி ஸ்கேன் எடுத்துப் பாருங்க என்றார்.
டாக்டர் உடனே ஒரு பேப்பரில் வேக வேகமாக எழுதினார்.ம்..போய் ஸ்கேன் எடுத்திட்டு வாங்க என்று சீட்டு கொடுத்து அனுப்பினார்.
பூங்கொடி கண்ணாயிரத்தை அழைத்துக்கொண்டு.. வாங்க.. உங்களுக்கு மூளையிருக்கா இல்லையான்னு ஸ்கேன் எடுத்துப் பாத்துடுவோம் என்று ஸ்கேன் எடுக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்.
கண்ணாயிரம்..அப்படியா..எல்லோரும் எனக்கு மூளையில்லை என்று ஏசுவாங்க.
நான் நான் அவங்களிடம் டேய்..எனக்கு மூளையிருக்குடா..ஒருநாள் நான் அதை நிரூபிப்பேன்னு சொல்லியிருக்கேன்..அதற்கு சரியான நேரம் வந்துவிட்டது..ஸ்கேன் எடுத்திட்டு என் இளைமை கால நண்பர்களிடம் எனக்கு மூளையிருக்குன்னு காட்டுவேன் என்றார்.
பூங்கொடி..ம்..எது உண்மை என்று ஸ்கேன் எடுத்துப் பாத்திடுவோம் என்றார்.
கண்ணாயிரமும் பூங்கொடியிடம்..நீங்க இங்கே இருங்க..நான் போய் ஸ்கேன் எடுத்திட்டு வர்ரேன் என்று சீட்டை வாங்கிக்கொண்டு ஸ்கேன் எடுக்கும் அறைக்குள் நுழைந்தார்.
பூங்கொடி..ம்.. கண்ணாயிரத்துக்கு மூளையில்லை என்று ஊரே சொல்லுது..நானும் அவருக்கு மூளையில்லை என்று சொல்லியிருக்கேன் நான் சொல்லியபடி..ஸ்கேனில் நல்ல ரிப்போட்டே வரட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டார்.
கண்ணாயிரம்.. எனக்கு மூளையிருக்கு என்று நல்ல ரிப்போர்ட் வரட்டும் என்று வேண்டியபடி ஸ்கேன் எடுக்க…உள்ளே நுழைந்தார்.
சட்டையை கழற்றினார்.ஊழியர் அவரிடம்..உங்களுக்கு தலையில் மட்டும் தான் ஸ்கேன் எடுக்கணும் என்க..கண்ணாயிரம்..ஏங்க..எனக்கு உடம்பு முழுவதும் மூளை இருக்கு.. நான் மத்தவங்களைவிட ரொம்ப வித்தியாசமா சிந்திக்கிறேன்.. ஆனா ஒருத்தனும் நம்ப மாட்டேங்கிறான்.. நீங்க என் உடம்பு முழுவதும் ஸ்கேன் எடுங்க என்று அடம் பிடித்தார்.
ஊழியர்..தலையில் அடித்துக்கொண்டு..சரி வாங்க..என்றபடி அறைக்குள் அழைத்துச்சென்றார்.
கண்ணாயிரம் ம் பேசவேண்டிய இடத்திலே ஒழுங்கா பேசனாத்தான் காரியம் நடக்கும் என்றபடி..ஸ்கேன் எடுக்கும் அறையில் உள்ள படுக்கையில் படுத்தார்…ஊழியர் ஸ்கேன் எடுக்கத் தயாரானார்.
கண்ணாயிரம் அவரிடம்..ஸ்கேன் சரியா ஒர்க் ஆகுமா.. இதுக்கு முன்னால நீங்க உங்க மூளையை ஸ்கேன் எடுத்துப் பார்த்திருக்கியளா என்று கேட்க ஊழியர்..ம்.ஆ..என்று கத்தினார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்
புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.