என்ஜினீயரிங் இறுதி செமஸ்டர் தேர்வு தள்ளிவைப்பு-அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
1 min read
Engineering Final Semester Exam Postponement-Anna University Information
11.5.2024
தமிழ்நாட்டில் கடந்த 19-ந்தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ஒரு சில கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்த கல்லூரிகளில் இருக்கும். இதனால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குள் மாணவர்கள் தேர்வுக்காக வந்து செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.
இதனை கருத்தில் கொண்டு செமஸ்டர் தேர்வை ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-வாக்குப்பதிவு எந்திரங்கள் சில கல்லூரிகளில் வைக்கப்பட்டு, அவை வாக்கு எண்ணும் மையங்களாக செயல்பட்டு வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கல்லூரிகளுக்குள் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் வந்து செல்வதற்கு மிகவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதோடு, சில இடங்களில் தடையும் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு சரியாக இருக்காது. எனவே வருகிற 15-ந் தேதி முதல் தொடங்க இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற தன்னாட்சி அதிகாரம் பெறாத என்ஜினீயரிங் கல்லூரிகளின் இறுதி செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. இந்த தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனை மாணவர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.