தென்காசியில் 13-ந் தேதி கல்லூரி கனவு நிகழ்ச்சி – ஆட்சித்தலைவர் தகவல்
1 min read
May 13 College Dream Program in Tenkasi – Governor’s Information
10.5.2024
தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் 13.05.2024 அன்று நடைபெறவுள்ளது என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ்,
12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance). தென்காசி மாவட்டத்தில் 13.05.2024 (திங்கட்கிழமை) அன்று தென்காசி, இ.சி.ஈ.அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகள் மற்றும் மருத்துவம், கலை, பொறியியல், வடிவமைப்பு, விவசாயம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிடைக்கும் தொழில் வேலைவாய்ப்புகள் சார்ந்து வழிகாட்டுதலுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேற்காணும் நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும். இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 53 அரசினர் மேல்நிலைப்பள்ளிகள், 16 முழு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 23 பகுதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், 55 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் 1 மேல்நிலைப்பள்ளி ஆகிய 148 மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ/ மாணவியர் களில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் இருந்து மொத்தம் 1500-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பல்துறை நிபுணர்கள் வருகை தந்து மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்தும், அவற்றிற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைப்பார்கள். மேலும் மாணவர்கள் யர்கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் கடனுதவிகள் சார்ந்து விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் அரசு மற்றும் தனியார் துறையினை சேர்ந்த வங்கிகள், கலை மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன.
மாணவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து செல்ல வசதியாக போக்குவரத்து வசதி மதிய உணவு மற்றும் தேநீர் உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகளை, பல்வேறு துறைகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணாக்கர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.