பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – போலீஸ் அதிகாரி ஒருவர் பலி
1 min read
Anti-government violence in Pakistan – one police officer killed
13.5.2024
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டு கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலை உயர்வை கண்டித்தும், மேல்தட்டு மக்களுக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்ய கோரியும் அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் பொதுமக்கள் தாக்கியதால் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார். மேலும் 78 போலீசார் உள்பட 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். பின்னர் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதியில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை சமாளிப்பது தொடர்பான அவசர கூட்டத்துக்கு அதிபர் ஆசிப் ஆலி சர்தாரி அழைப்பு விடுத்துள்ளார்.