June 16, 2024

Seithi Saral

Tamil News Channel

உவரி அருகே ஜீப்-கார் நேருக்கு நேர் மோதி 2 பெண்கள் பலி

1 min read

2 women killed in jeep-car head-on collision

22.5.2024
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள தெற்கு புலிமான்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 42).

இவர் இறந்துபோன தனது தந்தை முருகேசனுக்கு திதி கொடுப்பதற்காக தனது தாய், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் ஒரு ஜீப் வாகனத்தில் இன்று அதிகாலையில் கன்னியாகுமரி புறப்பட்டு சென்றுள்ளார். அதனை உவரி அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஓட்டிச்சென்றார்.

கூடங்குளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தோட்டவிளையை கடந்து ஜீப் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சொகுசு கார் எதிர்பாராதவிதமாக ஜீப்பின் மீது நேருக்கு நேராக மோதியது.
இதில் ஜீப்பில் பயணித்த விஜயகுமாரின் மனைவி சந்தனகுமாரி (38), விஜயகுமாரின் சகோதரி முத்துச்செல்வி (32) ஆகிய 2 பேருக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

மேலும் அதில் பயணித்த விஜயகுமார், அவரது தாயார் சரஸ்வதி (60), இளவரசன் (14), சம்போ (8), தமிழ் செல்வி (46), ஹரினி (13), கனிஷ்கா (13), பாக்கியவதி (56), ராஜேந்திரன் (50) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 11 பேரையும் மீட்டு கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சந்தனகுமாரியும், முத்துச்செல்வியும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 9 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.