சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட 17 வயது சிறுவன் உயிரிழப்பு
1 min read
17-year-old boy died after injecting drugs in Chennai
25/5/2024
சென்னையில், போதை ஊசி செலுத்திக் கொண்ட 17 சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு டிகாஸ் சாலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் கடந்த 6 மாதமாக எலெக்ட்ரீசியன் ஹெல்பர் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பாரிமுனை லோன்ஸ் ஹொயர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சிறுவன் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்கள் 3 பேருடன் அமர்ந்து சிறுவன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, நண்பர்கள் 4 பேரும் போதை ஊசி செலுத்திக் கொண்டதாக தெரிகிறது.
அப்போது திடீரென அவர் வாந்தி எடுத்து மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் நண்பர்கள் அவரை மீட்டு, இரு சக்கர வாகனத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, போலீஸார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது, அந்தச் சிறுவனின் உடையில் போதை ஊசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார், வழக்குப்பதிவு செய்து சிறுவனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப் பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை சாடி வரும் நிலையில், போதை ஊசி செலுத்தி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது.