பிரதமரின் தியானம் தேர்தல் விதிமுறை மீறல் இல்லை- குமரி மாவட்ட கலெக்டர் விளக்கம்
1 min read
The Prime Minister’s meditation is not a violation of election rules- Kumari District Collector explains
30.5.2024
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டப தியான மண்டபத்தில் இன்ஞறு மாலை தியானம் தொடங்கினார். அவர் 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் எனவும், இது தேர்தல் பரப்புரை என்பதால் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள அனுமதி வழங்கக்கூடாது, பிரதமர் மோடி வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பாரதப் பிரதமர் வருவது இந்திய அளவில் பிரதிபலிக்கும். இது ஒருவித தேர்தல் பரப்புரை யுத்தி என்றும், கோடை விடுமுறை நேரத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரும் நிலையில் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இன்னொரு விஷயம், பாதுகாப்பு என்ற பெயரில் அரசின் வரிப்பணம் வீணாகும் என்பதால் மோடி வருகையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதே போல் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் பிரதமர் மோடி வருகைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் பிரதமர் வருகை விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. அவரது வருகை விதிமீறலா? என்பதற்கு குமரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர் கூறியதாவது:-
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவோ, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாலோ, கட்சி கூட்டம் நடத்தினாலோ தான் சம்பந்தப்பட்ட கட்சியினர் அனுமதி கோருவர். ஆனால் பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் யாரும் அனுமதி கோரவில்லை. நாங்களும் அனுமதி கொடுக்கவில்லை. அவரது வருகை தேர்தல் விதிமீறலுக்கு உட்பட்டது அல்ல.
இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.