April 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கனிமவள லாரியால் விபத்து- ரவி அருணன் கண்டனம்

1 min read

Mining truck accident- Ravi Arunan condemned

14.5.2024
தென்காசி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்படும் கனிம வள லாரிகளால் ஏற்படும் தொடர் விபத்துக்கள் உயிர் பலியை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும் முன்னாள் தென்காசி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான கே ரவி அருணன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான கே ரவி அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் செல்லும் கனரக லாரிகள் விதிகளை மீறி அதிவேகமாக இயக்கப்பட்டு தினமும் விபத்துக்களை ஏற்படுத்தி உயிர்பலிகள் அதிகரித்து வருவது வாடிக்கையாகிவிட்டது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு துறை அரசு அதிகாரிகளுக்கு எத்தனையோ முறை கோரிக்கை வைத்தும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ள தால் கனிம வள லாரிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று தென்காசி மதுரை ரோட்டில் ஈனா விலக்கு என்ற பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது கனிமவள லாரி ஒன்று அதி வேகமாக வந்து மோதி மூன்று உயிர்களை காவு வாங்கி இருக்கிறது.

இதில் சிவராமப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த அழகுசுந்தரி என்ற பெண்ணும் அவரது 4 வயது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள்.
சங்கரன்கோவிலை சேர்ந்த செல்வி என்ற பெண்மணி ஒருவரும் பலியாகி இருக்கிறார்.

இந்த மூவரின் குடும்பங்களுக்கு யார் பொறுப்பு.? அதிலும் செல்வி என்பவர் கணவனை இழந்தவர் என்று சொல்லப்படுகிறது. அவரது இன்னொரு குழந்தை வீட்டில் இருக்க அவருடன் பயணிக்காதால் உயிர் பிழைத்திருக்கிறது.

அந்த குழந்தை தற்போது தாய் தந்தையரையும் சகோதரனையும் இழந்து அனாதையாக நிற்கிறது . அந்த குழந்தையின் எதிர்காலம் என்ன ஆகும் என்று என்பது கேள்விக்குறி. அந்தக் குழந்தையின் உயர்கல்வி வரையிலான செலவு மற்றும் வேலை வாய்ப்பிருக்கு தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

எனவே இந்த விபத்தில் இறந்த மூவரின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாயும், காயமடைந்தவர் களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

கனிம வள லாரிகளின் அட்டகாசம் மற்றும் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை இயக்குபவர்கள் தமிழக அரசின் எந்த விதிகளையும் கடைப்பிடிப்ப தில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்து இருக்கிறார்கள்.

அதிக அளவு பாரம் ஏற்றுவது, அதிக வேகத்தில் செல்வது, சாலைகளை சேதப்படுத்துவது, குடிநீர் குழாய்களை உடைப்பது போன்றவை அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது.
அரசுத்துறை அதிகாரிகள் இதை கொஞ்சம் கூட தட்டிக் கேட்காததால் இவர்கள் இஷ்டத்திற்கு அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் தான் இப்படி விபத்துக்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இந்த விபத்து நடந்த இடத்தில் நமது இயற்கை வள பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் சிலர் கண்ட நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை தருகிறது.

அதாவது விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே கனிம வள லாரியை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வேறு ஒரு இடத்திற்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறார்கள் சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளையும் தகடுகளையும் போலீசாரே துப்புரவு ( தொழிலாளி போல) செய்து அகற்றி இருக்கிறார்கள்.

வழக்கமாக ஒரு விபத்து நடந்தால் செய்தியாளர் களுக்கு போலீசார் உடனடியாக தகவல் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த விபத்து நடந்து அரை மணி நேரம் கழித்த பிறகுதான் செய்தியாளர் களுக்கு தகவல் கொடுக்கப் பட்டிருக்கிறது.
காரணம் அவர்கள் உண்மை நிலையை படம் பிடித்து காட்டி விடக்கூடாது என்பதில் போலீசார் காட்டுகிற அக்கறை என்று எண்ணத் தோன்றுகிறது.

அதே போல் காயம் அடைந்தவர்களையும், இறந்தவர்களின் உடல்களை படம் எடுப்பதில் கூட அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டனதாக தெரிகிறது.

ஆக கனிமவள கடத்தலில் ஈடுபடும் அவர்களுக்கு போலீசார் எந்த அளவுக்கு அணுசரனையாக இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. என்னதான் உயர் அதிகாரி உத்தரவு என்று சில போலீசார் இதற்கு காரணம் சொன்னாலும் இந்த போக்கை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

போனது போகட்டும் இனியாவது அதிகாரிகள் இரும்பு கரம் கொண்டு கனிமவள லாரிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

ஏற்கனவே 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட லாரிகளுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு கோர்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்டிருக்கிறது.
அந்தத் தடையை நீக்குவதற்கு அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனைக்குரிய ஒரு விஷயமாகவே இருக்கிறது.
இனியும் காலம் தாழ்த்தாது அரசு அந்தத் தடையை நீக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

அதோடு மட்டுமல்லாமல் கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு ஏற்றி செல்வதை அடியோடு தடுத்து நமது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.