சிறையில் இருந்தே வென்ற அப்துல் ரஷீத்: எம்.பி. பதவியேற்க பரோல் கிடைத்தது
1 min read
Abdul Rasheed won from jail: M.P. Parole to take office
2.7.2024
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா தொகுதியில் ஷேக் அப்துல் ரஷீத் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஞ்சினியர் ரஷீத் என அழைக்கப்படும் அப்துல் ரஷீத், உபா சட்டத்தில் கைதாகி 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில், வெற்றி பெற்ற ஷேக் அப்துல் ரஷீத் நீதிமன்ற உத்தரவை பெற்றால்தான் நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்க முடியும்.
அதனால் திகார் சிறையில் உள்ள அப்துல் ரஷீத் எம்.பி. ஆக பதவி ஏற்பதற்காக ஜூலை 5 ஆம் தேதி 2 மணி நேரம் கஸ்டடி பரோல் கொடுத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும் அப்துல் ரஷீத் சிறையில் இருந்து வெளியே அழைத்து செல்லும்போது இன்ஸ்பெக்டர் அல்லது உதவி ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் பாதுகாப்புக்கு செல்ல வேண்டும். மேலும் செல்போன் பேசுவதற்கும், எம்.பி.க்கள் மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகள் தவிர இதர நபர்களை சந்தித்து பேச கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள அப்துல் ரஷீத் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்தால் தனது எம்.பி பதவியை அவர் இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.