செங்கோட்டை பள்ளி மாணவன் திடீர் சாவு -அரசு மருத்துவமனை முற்றுகை
1 min read
Sudden death of Red Fort school student – Govt hospital siege
2.7.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பள்ளி மாணவனுக்கு திடீர் வாந்தி மயக்கம் வலிப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதனால் அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கோட்டை காமாட்சி தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவரது மகன் அசோக் குமார் (வயது 9),இவர் செங்கோட்டையில் உள்ள கச்சேரி காம்பவுண்ட் நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற இவர் டிபன் பாக்ஸில் மதிய உணவாக சாம்பார் சாதம் கொண்டு சென்று மதியம் ஒரு மணிக்கு பள்ளியில் வைத்து டிபன் பாக்ஸில் இருந்த உணவை சாப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு வாந்தி மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்ததை அடுத்து அவரது பெற்றோர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு மாணவனை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது .
இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செங்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவன் திடீரென வாந்தி எடுத்து உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவன் அசோக் குமார் உயிரிழந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி மருத்துவமனை முன்பாக போராட்டம் நடத்தினார்கள் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.