June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்

1 min read

Tourists flock to watch the sunrise at Kanyakumari

7.7.2024
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் வார இறுதி விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

நேற்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதனை பார்த்து ரசித்தனர்.

மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்து இருந்தனர்.

ஆனால் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்கு வரத்து தொடங்கப்படவில்லை. பகல் 10.30 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து சுமார் 2½ மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.

மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *