அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி
1 min read
Release of water from Manimuthar dam for kar season cultivation
12.7.2024
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ‘போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை இதே கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இந்த மனு மீதான முடிவு வரும்வரை அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்களை முன்வைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, இந்த மனு மீது 12-ந்தேதி (இன்று) தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார்.
அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு முடியும் வரை உத்தரவை தள்ளிவைக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு வருகிற 16-ந்தேதி பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.