கடைசிவெள்ளி பூஜை: தோரணமலையில் திருமணம் செய்த புதுமண தம்பதிகளுக்கு மரியாதை
1 min read
Respect to the newlyweds who got married in Thoranamalai
12.7.2024
தோரண மலை முருகன் கோயிலில் ஆனி மாத கடைசி வெள்ளியையொட்டி இன்று காலை வருண கலச பூஜை நடைபெற்றது.. மேலும் இக்கோவிலில் திருமணம் செய்த புதுமண தம்பதிகள் கெளரவிக்கப்பட்டனர்.
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமையும் நடைபெறும். ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று காலை இப்பூஜை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து, வருண கலச பூஜை, வேல்பூஜை நடைபெற்றது.
முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
மேலும் தோரண மலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகளை அழைத்து, மரியாதை செலுத்தப்பட்டனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் முருகன் போட்டோ வழங்கப்பட்டன. மொத்தம் 9 ஜோடி புதுமண தம்பதியர் வந்திருந்தினர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.