June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம் – வாக்களிக்க மறுத்த இந்தியா

1 min read

UN resolution against Russia’s attack on Ukraine – India abstains from voting

12.7.2024
உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் தாக்குதலை நிறுத்தி ரஷிய படைகள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று ஐநா கொண்டுவந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது. நேற்று [ ஜூலை 11] ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 99 நாடுகளும், எதிராக 9 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள் வாக்களிக்க மறுத்துள்ளன.

கடந்த ஜூலை 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து நடைபெற்ற இந்தியா- ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவருக்கு ரஷியாவின் உயரிய விருதான ஆர்தர் ஆப் செயின்ட் ஆன்ரியூ தி அப்போஸ்தல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. உக்ரைன் போருக்கு மத்தியில் மோடி ரஷிய அதிபர் புதினுடன் இணக்கம் காட்டுவது மேற்கு நாடுகளுக்கு கோபமூட்டியுள்ளது.
மோடி ரஷியா சென்ற கடந்த ஜூலை 8 ஆம் தேதி அன்று உக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 49 பேர் உயிரிழந்தனர். கீவ் நகரில் உள்ள உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை தகர்க்கப்பட்டது. இந்தியா புத்தரைத் தான் உலகத்துக்கு கொடுத்தது, யுத்தத்தை அல்ல என்று மோடி தனது பயணத்தின்போது பேசினாலும், தற்போது ஐநாவின் போர் நிறுத்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக 38,000 மக்கள் உயிரிழந்த இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நிறுத்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், மோடியின் ரஷியா பயணம் குறித்து விமர்சித்துள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, தற்போதைய சூழலில் எந்த போரும் தொலைவில் இல்லை. இந்தியா – அமெரிக்காவின் நட்புறவை மீண்டும் உறுதி செய்ய வேண்டி உள்ளது. அமெரிக்க உறவை நினைத்து போல் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *