ஆவுடையானூர் குடிநீர் பிரச்சனை- யூனியன் அலுவலகம் முற்றுகை
1 min read
Audhaiyanur drinking water problem- Union office siege
14.7.2024
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சிக்குட்பட்ட ஆவுடையானூர், பொடியனூர், சின்னநாடானூர், சாலடியூர், கோட்டைவிளையூர் ஆகிய பகுதிகளில் வார்டு உறுப்பினர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக சுமார் 15 முதல் 25 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்; விநியோகம் செய்யப்படுவதாகவும், சீரான குடிநீர் வழங்கக்கோரியும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி துணைத்தலைவர் மகேஸ்வரி முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தலைமையில் பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த பாவூர்சத்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வேல்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கல்யாண ராமசுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது நாளை ஆவுடையானூர் ஊராட்சிக்கு வருகை தந்து, ஆய்வு செய்து சீரான குடிநீர் கிடைத்திடவும், மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து ஆவுடையானூர் ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்த மனுவில், ஊராட்சி பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும். ஆவுடையானூர் ஊராட்சி பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு சுகாதார பொருட்கள் வாங்கியதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், மோசடிகள் தொடர்பாக கடந்த ஜனவரி 19ந்தேததி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில், முறைகேடு மோசடிகளுக்கு எதிராக 12 வார்டு உறுப்பினர்கள் வட்டாட்சியரிடம் எழுத்துபூர்வமான கடிதங்கள் கொடுத்துள்ள நிலையில், ஊராட்சி தலைவர் மீது தகுதி நீக்க நடவடிக்கை விரைந்து எடுத்திட வேண்டும். ஊராட்சியில் நடைபெற்ற சுவஜல்தார திட்டத்தில், தணிக்கை நடத்தி மோசடிகள் செய்தவர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஊராட்சி பகுதியில் காற்றில் விழுந்த மரங்களை சட்ட விரோதமாக விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் (எ) கோபி கூறுகையில், ஆவுடையானூர் ஊராட்சி பகுதி பொதுமக்களுக்கு ராமநதி ஆற்றுப்படுகையில் உள்ள கிணறுகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், இங்குள்ள நீரேற்றும் பம்பிங் லைனில் மின் மாற்றி பழுதடைந்துள்ளதாலும், குறைந்த வோல்டேஜ் இருப்பதால் குடிநீர் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சரிசெய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.