நீலகிரி அரசு கலைக்கல்லூரிக்கு காமராஜர் பெயரை சூட்ட ஆவண காப்பக இயக்குனர் கடிதம்
1 min read
Letter from Director of Archives naming Nilgiris Government Arts College after Kamaraj
15.7.2024
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் உள்ளூர் மாணவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரி, 1955-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்டது. பெரும் சவால்களுக்கு மத்தியிலேயே இந்த கல்லூரி தொடங்கப்பட்டது.
இந்த கல்லூரியில் படித்த பலரும் தற்போது இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளி நாடுகளிலும் உயர் பதவிகளில் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர். இது இந்த கல்லூரிக்கு கிடைத்த பெருமை.
இப்படிப்பட்ட இந்த கல்லூரி இந்த மலை மாவட்டத்தில் உருவாவதற்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது 121-வது பிறந்தநாளான இந்த ஆண்டில், ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரிக்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆவண காப்பகத்தின் இயக்குனர் வேணுகோபால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆவண காப்பகத்தின் இயக்குனர் வேணுகோபால் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1955-ம் ஆண்டில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலேயே இந்த கல்லூரியானது ஏற்படுத்தப்பட்டது.
கல்லூரி முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். நீலகிரியில் முதன் முதலாக கட்டப்பட்ட நவீன கட்டிமாக இந்த கல்லூரியின் கட்டிடம் விளங்கி வருகிறது.
தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் இருப்பது போன்று, மலைப்பகுதியிலும் ஒரு கலைக்கல்லூரியை தொடங்க வேண்டும் என அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜர் முடிவெடுத்தார்.
இதுதொடர்பாக தனது அமைச்சரவை சகாக்களுடன் விவாதித்து, அவர்களது கருத்துக்களை கேட்டார்.
அப்போது, அமைச்சர்களில் சிலர், மலைப்பிரதேசத்தில் கலைக்கல்லூரிக்கு பதிலாக தொழில் நுட்ப கல்லூரி திறந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர்.
ஆனால் காமராஜர் அங்கு கலைக்கல்லூரி தான் தொடங்குவேன் என்பதில் உறுதியாக இருந்து, கல்லூரியையும் திறந்தார். அதன்பின்னரும் அமைச்சர்களில் சிலர் கலைக்கல்லூரி தொடர்ந்து செயல்படுவது சாத்தியமா என்றே கேள்வி எழுப்பினர்.
அதற்கு காமராஜர், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடையை மூடுவதற்கு நான் ஒன்றும் இங்கு பெட்டிக்கடை திறக்கவில்லை. கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளேன். இதன் மூலம் பழங்குடியினர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் என பல தலைமுறை கடந்து அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவே இந்த கல்லூரியானது இருக்கும் என பதில் அளித்தார். அவர் கூறிய வார்த்தைகள் இப்போது உண்மையாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். உள்ளூரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு தங்கி படித்து வருகிறார்கள்.
இந்த கல்லூரி மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. அவர்கள் பெரிய, பெரிய பதவிகளில் அமருவதற்கும் இந்த கல்லூரி ஒரு அடித்தளமாக இருந்து வருகிறது.
தமிழகத்திலேயே சிறந்த ஒழுக்கத்திற்கும், செயல்பாட்டிற்கும் பெயர் பெற்ற கல்லூரியாக இந்த கல்லூரி விளங்கி வருகிறது. பல சிறந்த மாணவர்களையும் இந்த கல்லூரியானது உருவாக்கி உள்ளது.
இப்படி தொலைநோக்கு சிந்தனையோடு, மலை மாவட்டத்திலும் ஒரு கலைக்கல்லூரியை உருவாக்கி, பல மாணவர்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றி வைக்க முக்கிய பங்காற்றிய முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த கல்லூரிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என நீலகிரி மாவட்ட மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.