குற்றாலத்தில் தனியார் அருவிகளிலும் குளிக்க தடை
1 min readBathing in private waterfalls is also prohibited in Courtalam
30.7.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் செங்கோட்டை பகுதிகளில் உள்ள தனியார் அருவிகளுக்கு படை எடுத்தனர். பொதுமக்களின் நலன் கருதி தனியார் அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலிஅருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள் செங்கோட்டை அருகே குண்டாறு மற்றும் கண்ணுப்புளி மெட்டு பகுதிகளில் உள்ள தனியார் அருவிகளுக்கு படையெடுக்க தொடங்கினர். செங்கோட்டை பகுதிகளில் உள்ள தனியார் அருவிகளுக்கு செல்வதற்கு குண்டும் குழியுமான சாலையில் ஆபத்தான வனப்பகுதிகளை தாண்டி செல்ல வேண்டும். அதுவும் மழை காலங்களில் இந்த பாதையில் செல்வது மிகவும் ஆபத்தானது.
இந்நிலையில் நேற்று குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஒரே நேரத்தில் செங்கோட்டை பகுதியில் உள்ள குண்டாறு மற்றும் கண்ணுப்ப்புளி மெட்டு பகுதியில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா மற்றும் வருவாய் துறையினர் கண்ணுப்புளி மெட்டு பகுதிக்கு விரைந்து சென்று அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி தனியார் அருவிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறியதோடு அங்கு குவிந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தனியார் அருவிகளுக்கு செல்லும் பாதையை மூடி பூட்டு போட்டனர்
மேலும் குண்டாறு வனப்பகுதியில் உள்ள தனியார் அருவியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருப்பதை அறிந்த கோட்டாட்சியர் லாவண்யா அங்கும் சென்று சுற்றுலா பயணிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினார்கள். தடையை மீறி தனியார் அருவிக்கு குளிக்க சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
இது பற்றி தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா கூறியதாவது :- குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் செங்கோட்டை பகுதிகளில் உள்ள தனியார் அருவிகளில் குளிக்க ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்துள்ளனர். இந்தத் தனியார் அருவிகளுக்கு செல்லும் பாதை மிகவும் மோசமாக இருப்பதால் அதுவும் மழை நேரங்களில் அந்தப் பகுதியில் செல்வது மிகவும் ஆபத்தானது. என்பதால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதால் தனியார் அருவிகளில் குளிக்க தறாகாலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.