விண்வெளியில் இருக்கும் சுனிதாவை அழைத்துவர ‘நாசா’ போடும் திட்டம்
1 min read‘NASA’ plans to bring Sunita who is in space
8/8/2024
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(வயது 58), புட்ச் வில்மோர்(61), ஆகியோர் கடந்த ஜூன் 5ம் தேதி பயணம் மேற்கொண்டனர். ஜூன் 7ல் பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றடைந்தனர்.
விண்வெளி மையத்தில் இருந்து ஆய்வு நடத்தி விட்டு பூமிக்கு திரும்பும் சூழலில் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட கோளாறால் இருவரும் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. 10 நாட்கள் ஆய்வு நடத்திவிட்டு பூமிக்கு திரும்பியிருக்க வேண்டிய நிலையில், தற்போது 50 நாட்களுக்கு மேலாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் தவித்து வருகின்றனர். அவர்களை அழைத்து வர நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது.
அந்நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியுடன் அவர்களை அழைத்து வர உள்ளனர். 4 வீரர்கள் குழுவுடன் விண்வெளிக்கு செல்லும் இந்த டிராகன் விண்கலன் அடுத்தாண்டு பிப்ரவரியில் தான் பூமிக்கு திரும்புமாம். அதற்குள் ஸ்டார்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படாமல், சுனிதாவின் ‘ரிட்டர்ன்’ பயணத்தில் சிக்கல் நீடித்தால், இதுதான் ஒரே வழியாம்.
ஜூனில் சென்றவர்கள் 8 மாதம் கழித்தே பூமி திரும்புவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர்கள் தயார் செய்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.