ரஜினி பற்றி பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
1 min read
Minister Duraimurugan’s explanation for talking about Rajinikanth
26.8.2024
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரணமானது இல்லை என்றும், முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் சர்வசாதாரணமாக இதனை செய்கிறார் எனவும் பேசினார். மூத்த அமைச்சர்கள் குறித்து ரஜினிகாந்த் இவ்வாறு பேசியிருந்தார்.
ரஜினிகாந்தின் இந்த பேச்சு தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து இருந்த துரைமுருகன், ” சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து கடைசி காலத்திலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதா? அப்படித்தான்” என்று கூறினார். அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
இந்த நிலையில், தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் துரைமுருகன், “எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக துரைமுருகன் கூறியதாவது:-
“எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம், நாங்கள் எப்போதும்போல நண்பர்களாகவே இருப்போம்” என்றார்.
முன்னதாக ரஜினிகாந்தும் துரைமுருகன் பேசியதில் வருத்தம் இல்லை என சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.