ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம்
1 min read
Jagadratsaka fined Rs 908 crore by enforcement department
28.8.2024
வெளிநாட்டு நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய விவகாரத்தில், தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்திற்கு ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அந்நிய செலாவணி மேலாண் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகன் வாங்கி உள்ளார். பிறகு, இதனை மனைவி,மகன், மகள் பெயரில் மாற்றியுள்ளார். இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்ததாக குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, விளக்கம் கேட்டு ஜெகத்ரடசகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் விதிமீறல் நடந்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ், அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பு சொத்து முடக்கப்பட்டது. அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கான உத்தரவு கடந்த 26ம் தேதி பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்து உள்ளது.