ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது நீண்ட நாள் கோரிக்கைதான்: திருமாவளவன் பேட்டி
1 min readShare in governance and power is a long-standing demand: Thirumavalavan interview
14.9.2024
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2-ந்தேதி மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அ.தி.மு.க. மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்த மது ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் ஆட்சி, அதிகாரம் குறித்து தான் பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் திடீரென பகிர்ந்தார். வீடியோவை பதிவிட்ட சிலமணி நேரங்களிலேயே அது எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. திருமாவளவன் திடீரென ஆட்சி, அதிகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, பின்னர் நீக்கிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீடியோவை பகிர்ந்து, பின்னர் நீக்கியது குறித்து சென்னை விமான நிலையத்தில் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:
“வீடியோ பதிவை அட்மின் வெளியிட்டு இருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியாது. அவரிடம் விசாரித்து சொல்கிறேன். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது நீண்டகாலமாக நாங்கள் வைக்கும் கோரிக்கைதான். புதிதாக எதையும் சொல்லவில்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.