நடிகர் ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ்
1 min readActor Rajinikanth will be discharged tomorrow
3.10.2024
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தை முடித்து விட்டு, ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படவேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தொடர் படப்பிடிப்பு காரணமாக ரஜினிகாந்துக்கு உடல் சோர்வு இருந்தது. மேலும் கடந்த சில நாட்களாக அவருக்கு சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் உடல் நலப்பாதிப்புகள் ஏற்பட்டன.
இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் கடந்த 30-ம் தேதி மாலை ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். இதய நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்தனர். இதய குழாய் ரத்த நாளங்கள் சீராக உள்ளதா? என்பது குறித்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஏற்கனவே ரஜினிகாந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து இருப்பதால், அதன் மூலம் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டு சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுகிறதா? என்றும் டாக்டர்கள் பரிசோதித்தனர். இந்த பரிசோதனையில் ரஜினிகாந்துக்கு இதய ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை சரிசெய்யும் சிகிச்சைகள் நேற்றுமுன்தினம் அதிகாலை 5 மணி முதல் தொடங்கி நடந்தது. சுமார் 4 மணி நேரம் இந்த சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அவரது இதயத்தில் ரத்தநாளத்தில் ‘ஸ்டென்ட்’ வைக்கப்பட்டது. தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் நலமாக இருக்கிறார். இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐ.சி.யூ.வில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்ட ரஜினியை மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.