இந்த ஆண்டு மட்டும் நாய் கடித்து 34 பேர் பலி
1 min readThis year alone, 34 people died due to dog bites
3.10.2024
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு நாய் கடியால் உருவாகும் ரேபிஸ் பாதித்து 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலைகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை தெருநாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. சில சம்பவங்களின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 6.42 லட்சம் பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ரேபிஸ் பாதித்து 34 பேர் உயிரிழந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமான பாதிப்புகளாகும்.
கொசு மற்றும் விலங்குகளால் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது, நாய்க்கடியால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் உயிரிழப்புகளே தமிழகத்தில் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.
மலேரியா, சிக்கன்குனியா உள்ளிட்ட பல்வேறு வியாதிகளினால் இந்த ஆண்டில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. அதேபோல, 16,081 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற கொடிய நோய்களில் இருந்து பொதுமக்களின் உயிரிழப்புகள் தடுக்கப்பட்ட நிலையில், நாய் கடியால் 34 பேர் உயிரிழந்திருப்பது சுகாதாரத்துறைக்கு அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்.