August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

1 min read

16 Rameswaram fishermen arrested for catching fish across the border

23.10.2024
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் தற்போது அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணைக்குப் பிறகு மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நாளை (24.10.2024) ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *