நாம் படிக்காத சுதந்திர போராட்ட வரலாறு: கவர்னர் ரவி வேதனை
1 min read
Freedom struggle history we don’t read: Governor Ravi Angam
12.11.2024
”ஆயிரக்கணக்கான மக்கள் துணிச்சலுடன் போராடி உயிரையும், ரத்தத்தையும் தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத் தந்தனர். இந்த வரலாறு குறித்து நாம் இன்னும் படிக்கவில்லை,” என கவர்னர் ரவி கூறினார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது:-
2021 ல் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த பட்டியலை நான் கேட்டேன். அதற்கு தமிழக அரசு 30 பேர் கொண்ட பட்டியலை வழங்கியது. நாகாலாந்தில் ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளபோது, தமிழகத்தில் 30 பேர் தான் என்பது ஆச்சர்யமாக இருந்தது.
ஆங்கிலேயர்கள் நமது சுயகவுரவத்தை அழித்தனர். பிரிட்டனில் பாதிரியாராக இருந்த ஜேம்ஸ் மில் என்பவரை அழைத்து இந்தியாவின் வரலாற்றை ஆங்கிலேயர்கள் எழுத வைத்தனர். அவர் இந்தியாவிற்கு வராமலேயே, ‘ இந்தியர்கள் அனைவரும் கோழைகள். அடிமைகளாக இருக்க தகுதி பெற்றவர்கள். ஆண்மையற்றவர்கள்’ , ‘ ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் சிறந்தவர்கள்’ என புத்தகம் எழுதினார்.
இந்த புத்தகம் தான் ஆங்கிலேயர்களின் பாட புத்தகமாக இருந்தது. இந்தியாவில் பணிபுரிய விரும்பிய ஆங்கிலேயர்கள் இந்த புத்தகத்தை படித்தனர். படித்ததை வைத்து தேர்வில் தேர்ச்சி பெற்று இங்கு வந்து பணியாற்றினர். ஆங்கிலேயர்கள் நடத்திய கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இந்த புத்தகம் தான் பயன்படுத்தப்பட்டது.
இந்தியர்கள் யார் என்ற சுய கவுரவத்தை அழிக்க சதி செய்து ஆங்கிலேயர்கள் அதில் வெற்றியும் பெற்றனர். பல தலைமுறைகள் கடந்தும், மக்கள் இதனை நம்ப துவங்கினர். இதை படித்தே பட்டம் பெற்று ஆங்கிலேயர்கள், கிழக்கு இந்திய நிறுவனங்களில் பணியாற்றினர். நமது கல்வி முறை, தொழிலை அவர்கள் அழித்ததால், நமது மக்கள் கிழக்கு இந்திய கம்பெனியை சார்ந்து இருந்தனர். இதனால், வேலைக்கு செல்ல நமது மக்கள் இந்த பாடத்தையே படித்தனர்.இன்றும் நாம் அதில் இருந்து விடுபடவில்லை.
20ம் நூற்றாண்டில் திராவிட தலைவர்களை பற்றி சொல்லப்படுகிறது. தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி இல்லை. இன்றும் ஆங்கிலேயர்கள் தான் சிறந்தவர்கள் என நமது மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ‘நாம் அடிமைகளாக இருக்க வேண்டியவர்கள். அனைத்தும் நமது தவறு. நம்மை அடிமைப்படுத்தி ஆங்கிலேயர்கள் நல்லதை செய்தனர்’ என சொல்லிக் கொடுக்கின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் இந்த மண்ணின் விடுதலைக்காக போராடி தங்களது உயிரை தியாகம் செய்தனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் நேதாஜியின் இந்திய தேசியப்படையில் இணைந்தனர்.
19 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் 10 லட்சம் மக்களை அடிமைகளாக மாற்றி பர்மா, மலேஷியா, இலங்கை , பிஜி, மொரிஷியசுக்கு அழைத்துச் சென்று தங்களது நிறுவனத்தில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்ற வைத்தனர். இது பற்றி பாடப்புத்தகத்தில் இல்லை. ஆனால், ‘ஆங்கிலேயர்கள் வந்த 19ம் நூற்றாண்டு சிறந்த காலம். அவர்கள் தான் சமூக நீதியை கற்றுக் கொடுப்பதாக’ இன்றும் கற்றுக் கொடுக்கின்றனர்.
நமது கதாநாயகர்கள், தியாகிகள், உயிர் தியாகம் செய்தவர்களை மறந்தால் அந்த சமூகத்திற்கு எதிர்காலம் கிடையாது. அந்த சமூகம் நன்றியற்ற சமுதாயம் ஆகும். அந்த நன்றியற்ற சமூகம், நன்றியற்ற மக்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்காது.
நமது மண்ணில் ஆயிரக்கணக்கானோர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக உயிர்தியாகம் செய்துள்ளனர். அவர்களை கண்டு ஆங்கிலேயர்கள் பயந்துள்ளனர். நாட்டிற்கு சுதந்திரம் எப்படி கிடைத்தது என்பது குறித்து நாம் இன்னும் படிக்க வேண்டி உள்ளது. உண்ணாவிரத போராட்டம் மூலம் நமக்கு சுதந்திரம் கிடைத்ததாக கற்றுக் கொடுத்துள்ளனர். ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரையும், ரத்தத்தையும் தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத்தந்தனர்.
இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.