July 6, 2025

Seithi Saral

Tamil News Channel

நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

1 min read

2 squads formed to capture actress Kasthuri

14.11.2024
கடந்த 3-ந்தேதி சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார். அப்போது தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்,தெலுங்கு மக்கள் குறித்து தவறான கருத்துகளை தெரிவிக்கவில்லை. தவறாக பேசியதாக கருதினால் வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார். ஆனாலும் அவரது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் போலீசில், நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க சென்றபோது முன்னதாகவே அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் நடிகை கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
முன்னதாக கோயம்பேடு போலீசிலும் கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த சூழலில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில பாரத இந்து மக்கள் அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே வழக்கில் போலீஸ் கைதுக்கு பயந்து தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, கஸ்தூரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.
இதுவழக்கு தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், “பேச்சுரிமை எனும் பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ அல்லது சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது. சுதந்திரமாகப் பேசும் உரிமையை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. கற்றவர், சமூக ஆர்வலர் என தன்னைக் கூறிக் கொள்ளும் நடிகை கஸ்தூரியின் வாயிலிருந்து வந்துள்ள வார்த்தைகள் இழிவானவை.
தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக கஸ்தூரி பேசிய பேச்சு எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை நீதிமன்றம் பார்க்க வேண்டி உள்ளது. கஸ்தூரியின் பேச்சு வெறுப்புப் பேச்சாகவே உள்ளது. மனுதாரரின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவியுள்ள நிலையில் அது வெடிகுண்டு போல் உள்ளது.

கஸ்தூரியின் டுவீட், மன்னிப்பு கேட்க உண்மையான முயற்சி மேற்கொண்டதாக தெரியவில்லை. இதுபோன்ற கேவலமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மீது சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டால், அதிலிருந்து தப்பிக்க மன்னிப்பு கோருவது இனிமேல் ஏற்றுக்கொள்ளப்படாது. சொல்லப்பட்ட வார்த்தைகள் ஏற்கனவே வில்லிலிருந்து வெளியேறிய அம்பு போல அடைந்து சேதத்தை ஏற்படுத்திவிட்டது” என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முன் ஜாமின் கோரி ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.