தோரணமலையில் பௌர்ணமி கிரிவலம்- கூட்டு பிரார்த்தனை
1 min read
Poornami Krivalam at Thoranamalai- Collective prayer
15.11.2024
தென்காசி மாவட்டம், தென்காசி – கடையும் செல்லும் சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோவிலில்பௌர்ணமி கிரிவலம் மற்றும் கூட்டு பிரார்த்தனை வருண கலச பூஜையும் நடைபெற்றது
தோரணமலை முருகன் கோவிலில் கடைசி வெள்ளி மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று வருண கலச பூஜை மற்றும் கிரிவலம், கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் புராணச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் உடையது. அகஸ்தியர் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபடப்பட்ட இத்தலத்தில் முருகன் எழுந்தருளி இருக்கும் இந்த மலையே யானை வடிவமாக அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாத கடைசி வெள்ளியன்றும் வருண கலச பூஜையும், பௌர்ணமி அன்று தோரணமலையை சுற்றி ஆறரை கிலோமீட்டர் தூரத்தை பக்தர்கள் கிரிவலமாக நடந்து வருவது வழக்கம்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை பௌர்ணமியையொட்டி அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து ‘மழைக்கால நோயில் இருந்து மக்களை காப்பாய் முருகா” ‘கார்த்திகை ஒளிபோல் காலமெல்லாம் காத்திடுவாய் கார்த்திகேயா” ‘வான் மழை பொழிந்து வறண்ட பூமியை வளம்பெற வைப்பாய் முருகா” ‘ஏழைகளுக்கு உதவுவோரை ஏற்றம் பெற வைப்பாய் ஐயா” ‘உன்னை சரண் அடைந்தோம் முருகா.. உயர வைப்பாய் ஐயா” என வேண்டி கூட்டுப்பிராத்தனை நடைபெற்றது.
முன்னதாக கடைசி வெள்ளியையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை நடைபெற்றது. மேலும் மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது.
கிரிவலம் மற்றும் வருண கலச பூஜை, கூட்டு பிரார்த்தனையில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் காலை மற்றும் மதியம் அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.