மணிப்பூரில் கடத்தப்பட்ட 6 பேரும் கொலை; மந்திரிகள் வீடு மீது தாக்குதல்
1 min read
All 6 abducted in Manipur murdered; Attack on ministers house
16.11.2024
மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் இருந்து காணாமல் போன 6 பேரின் உடல்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்கள் மணிப்பூர்-அசாம் எல்லையின் ஜிரி நதி மற்றும் பராக் நதி சங்கமிக்கும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த உடல்கள் அசாமின் சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை 6 பேர் காணாமல் போன ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ராவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மூன்று உடல்களும் காணாமல் போன 6 பேரின் உடல்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக இம்பாலில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், வெள்ளிக்கிழமை மாலை ஜிரி ஆற்றின் அருகே மூன்று உடல்களும், சனிக்கிழமையன்று மேலும் மூன்று உடல்கள் அதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட மூன்று உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன, மீதமுள்ள மூன்று உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சனிக்கிழமை பிற்பகல் அங்கு கொண்டு வரப்பட்டன” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் 6 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து போராட்டக்காரர்கள் மந்திரிகளின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. முன்னதாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டு மந்திரிகள் மற்றும் 3 எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை முற்றுகையிட்டனர். இதனைத்தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ சபம் கொஞ்சகேசு, சபம் நிஷிகந்தா, ஆர்.கே.லிமோ ஆகியோரின் வீடுகள் சூறையாடப்பட்டன. இதனைத்தொடர்ந்து இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.