நயன்தாராவுக்கு இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் கண்டனம்
1 min read
Director SS Kumaran condemned Nayanthara
16.11.2024
தனுஷ் விசசயத்தில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
3 வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டுத் தனுஷ் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தற்காய் வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு LIC என்ற என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.
LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம்? என் கதைக்கும், அந்தத் தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் LIC என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில், பதில் அளித்தும், அதிகாரத் தன்மையுடன் அதே தலைப்பைத் தன் படத்திற்கு விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால், “உன்னால் என்ன பண்ண முடியும்’ என்ற அதிகார நிலை தானே காரணமாய் இருக்க முடியும்?அதற்கு எந்தக் கடவுள் மன்றத்தில் விக்னேஷ் சிவனைப் பதில் சொல்ல சொல்வீர்கள்?
உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு காத்திருந்து பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரத்தோடு நடந்துக் கொண்டு, என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காக நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும். இப்பொழுது வரை அந்தத் தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. என் படத்தையும் அது பாதிப்படையச் செய்திருக்கிறது.
எந்தப் படைப்பாளியும் தன் படைப்பைப் பல காரணங்களோடும் பல பொருட்செலவோடும் தான் கட்டமைக்கிறார்கள். நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்தும் பட்சத்தில் முறையான அனுமதியோடும் முறையான மதிப்பூதியத்தோடும் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தைக் கைக்கொள்ள வேண்டும். நீங்கள் இங்கு எதையும் இலவசமாகச் செய்யவில்லை. எங்கள் படைப்புகளை மட்டும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்புலகதிற்கு மிக மோசமான வழிகாட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனங்காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.