மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை-மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்வு
1 min read
Rain in Western Ghats – Manimuthar dam water level rises by 2 feet
16.11.2024
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு 1,504 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1,375 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணை நீர்மட்டம் 84.25 அடி நீர் இருப்பு உள்ளது. இன்று காலை நிலவரப்படி அந்த அணை பகுதியில் 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
மற்றொரு பிரதான அணையான 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு நேற்று காலை வரை குறைவான நீர்வரத்து இருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 1,375 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 67 அடியை எட்டியுள்ளது. அங்கு 30.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 82.47 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் 17 மில்லிமீட்டரும், நம்பியாறு அணை பகுதியில் 11 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் கன்னடியன் கால்வாய் பகுதியில் 35 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாநகரில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், இன்று அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
தொடர்ந்து காலையில் சாரல் மழை பரவலாக பெய்தது. அதன்பின்னர் வெயில் அடிப்பதும், மழை சாரலாக பெய்வதுமாக இருந்து வந்தது. பாளையில் 11.4 மில்லிமீட்டரும், நெல்லையில் 7.4 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தை பொறுத்தவரை பரவலாக கனமழை பெய்தது.
குறிப்பாக அம்பை, நாங்குநேரி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. களக்காட்டில் 15 மில்லி மீடடரும், அம்பையில் 26 மில்லிமீட்டரும், நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டியில் தலா 16 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தென்காசியில் 7 மில்லிமீட்டரும், செங்கோட்டையில் 9 மில்லி மீட்டரும், ஆய்குடி யில் 17 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கடனா அணை பகுதியில் 23 மில்லிமீட்டரும், ராமநதியில் 15 மில்லிமீட்டரும், குண்டாறில் 12 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து புனித நீராடியதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலும் கனமழை பெய்தது. இன்று காலையில் சில இடங்களில் சாரல் மழையும், ஒரு சில இடங்களில் வெயிலும் அடித்தது. திருச்செந்தூரில் 39 மில்லிமீட்டரும், ஒட்டப்பிடாரம், காயல்பட்டினத்தில் தலா 36 மில்லிமீட்டரும், குலசேகரன்பட்டினத்தில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.